7. ஆய்ச்சியர் குரவை



மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை--ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை ;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான் ;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்--கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள் ;


உரை

           "மாயவன் என்றாள் . . . . . முறை" மாயவன் என்றாள் குரலை - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள், விறல் வெள்ளை ஆயவன் என்றாள் இளி தன்னை - இளி நரம்பினை வென்றி மிக்க பலராமன் என்றாள், ஆய் மகள் பின்னையாம் என்றாள் ஓர் துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள், மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே மற்றையார் ஆம் என்றாள் ;
முன்னை முறை ஆம் என மாறுக. முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது துத்தமும் போல் ஐந்தாவதான முறை. ஆய் மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றொடும் கூட்டுக.

        "மாயவன் சீர் ..... விளரிதான்" மாயவன் சீர் உளார் பின்னையும் தாரமும் - மாயவன் எனப் பெயர் கூறப்பட்ட குரல் நரம்பினை அடுத்துப் பின்னையெனப்பட்ட துத்தமும் தாரமும் நின்றன. வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் - பலதேவரெனப்பட்ட இளி நரம்பினைச் சேர உழையும் விளரியும் நின்றன, கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் - கைக்கிளை என்னும் நரம்பு பின்னைக்கு இடப்பக்கத்தே நின்றது, வலத்து உளாள் முத்தைக்கு நல் விளரிதான் - முந்தை யென்னும் தார நரம்பிற்கு வலப்பக்கத் துள்ளது நல்ல விளரி என்னும் நரம்பு ;

        முந்தை என்பது முத்தை என விகாரமாயிற்று. எல்லா நரம்பினும் முன் தோன்றியதாகலின் தாரத்தை முந்தை என்றார். மகளிராதலின் உயர்திணை கூறினார்.

       "அவருள் ..... ஆயர்மகள்" அவருள் - அவ் வெழுவர் மகளிருள், வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு - வளவிய துளப மாலையினை மாயவனாகிய கண்ணன் தோளின்மீது சாத்தி, தண்டாக் குரவைதான் உள்படுவாள் - கூத்த நூலியல்பினின்றும் நீங்காத குரவையாடத் தொடங்குவாள், கொண்ட சீர் - சிறப்பினைக் கொண்ட, வைய மளந்தான் தன் மார்பில் திரு நோக்கா - உலகினை யளந்த திருமால் தன் மார்பினிடத்துத் திருவை விரும்பி நோக்காமைக்குக் காரணமாகிய, பெய்வளைக் கையாள் நம் பின்னைதான் ஆம் என்றே ஐ என்றாள் ஆயர் மகள் - வளை பெய்த கையினை யுடையாள் நம் பின்னைதானே யாமென்று மாதரி வியந்தாள் ;

        தண்டாமை - நீங்காமை. நோக்காப் பின்னை என்க. நம் பின்னை இதனை நப்பின்னை எனவும் வழங்குப. 1 சீவக சிந்தாமணியுரையில் "நப்பின்னை அவள் பெயர் ; நகரம் சிறப்புப் பொருளுணர்த்துவ தோரிடைச் சொல்" என்றார் நச்சினார்க்கினியர். நம் பின்னை - நமது பின்னை யெனினும் அமையும். ஐ, வியப்பு. ஆயர் மகள் - மாதரி.

1 சீவக. 482.