7. ஆய்ச்சியர் குரவை


                 கூத்துள்படுதல

அவர்தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்--முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணியென் றாள் ;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா--உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள் ;


உரை

         "அவர்தாம் ..... என்றாள்" அவர் தாம் செந்நிலை மண்டிலத்தார் கற்கடகக் கை கோத்து அந் நிலையே ஆடற்சீர் ஆயந்துளார் - சம நிலையாக நின்று மண்டிலத்தோடு நண்டுக் கரத்தைக் கோத்து அப்பொழுதே ஆடுதற்குத் தாளவுறுப்பை ஆராய்ந்த அவர்களுள், முன்னைக் குரல் கொடி - முதல் வைத்து எண்ணிய குரலிடத்து நின்ற மாயவனாகிய அவள், தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய இளியிடத்து நின்ற பலதேவனாகிய அவளை நோக்கி, பரப்பு உற்ற கொல்லைப் புனத்து - அகன்ற கொல்லையாகிய புனத்தின்கண், குருந்து ஒசித்தான் பாடுதும் முல்லைத் தீம் பாணி என்றாள் - வஞ்சத்தால் வந்து நின்ற குருந்த மரத்தினை முறித்த மாயவனை முல்லையாகிய இனிய பண்ணினால் பாடுவோம் என்றாள் ;

செந்நிலை - சமநிலை. மண்டிலம்-வட்டம். கற்கடகக்கையாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலும் கோத்தல். அந்நிலையே - அப்பொழுதே. சீர் - தாளவறுதி. தன் கிளையை நோக்கி என்பதற்குத் 'தனது கிளையாகிய துத்த நரம்பாகிய பின்னையை நோக்கி' என அடியார்க்குநல்லார் உரை காணப்படு கின்றது; குரலுக்குத் துத்தம் இணையும், இளி கிளையுமாகலின் துத்தத்தைக் கிளையென்றல் பாடப் பிறழ்ச்சி போலும். முல்லைப்பாணி - செவ்வழி யாழின் திறமாகிய முல்லைப் பண்.

எனா - என்று கூறி ;

"குரல் மந்தமாக ... பாட்டெடுப்பாள்" குரல் மந்தம் ஆக- பாடத் தொடங்குகின்றவள் குரல் என்னும் நரம்பு மந்தசுரமாக, இளி சமன் ஆக - இளி யென்னும் நரம்பு சம சுரமாக, வரன்முறையே துத்தம் வலியா - வந்த முறையானே துத்த நரம்பு வலி சுரமாக, உரன் இலா மந்தம் விளரி பிடிப்பாள் - விளரி நரம்பினையும் வலியில்லாத மந்த சுரமாகப் பிடிக்கின்றவள், அவள் நட்பின் பின்றையைப் பாட்டு எடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்த நரம்பாயவட்குப் பற்றுப் பாடுகின்றாள்;

விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் என்க. மந்தம் முதலியன முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனவும், மந்தம், சமம், உச்சம் எனவும் கூறப்படும். மந்திரத்திற்கு ஐந்தாவது சமமும், அதற்கைந்தாவது வலியும், பின்னும் அதற்கைந்தாவது மந்தமுமாக வருதல் காண்க. நட்பு - நாலாம் நரம்பு ; விளரிக்குத் துத்தம் நட்பு.