|
|
ஆடுநர்ப்
புகழ்தல
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னை யொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழு தேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே ;
எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று ;
|
|
"மாயவன்றன் . . . . . . . . . தகவுடைத்தே" மாயவன்
தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணன் தம் முனாகிய பலதேவருடனும்
அழகிய வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னையோடும், கோவலர் தம் சிறுமியர்கள்
குழற் கோதை புறஞ் சோர - இடையர் சிறுமியர்களுடைய கூந்தற்கண் சூடிய மாலைகள் எருத்தத்தே
வீழ்ந்து அசைய, ஆய் வளைச் சீர்க்கு அடிபெயர்த்திட்டு - கோத்த கைகளிலணிந்த அழகிய
வளையல்கள் ஒலிக்கின்ற தாளத்திற்கு ஒக்க அடியைப் பெயர்த்து, அசோதையார் தொழுது ஏத்த
- அசோதைப் பிராட்டியார் வணங்கிப் பரவ, தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே
- துவராபதியில் தாதாகிய எருப் பொருந்திய மன்றத்தில் ஆடிய குரவைக்கூத்து மிகவும் தகுதியை
உடைத்தாயிருந்தது ;
ஒடு இரண்டும் எண்ணிடைச்சொல். சிறுமியர் என்பது குட நாட்டு வழக்கென்பர். அசோதை -
ஆயர் பாடியில் கண்ணனை வளர்த்த தாய். குரவையோ-ஓ, வியப்பு. மாயவன் தம் முன்னினோடும்
பின்னையோடும் அடிபெயர்த்திட்டு ஆடும் குரவை யென்க. மாயவன் அன்றாடிய குரவையாகவே இதனைக்
கருதி மாதர் வியந்தாள்.
1
"மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்"
என்றார் பிறரும்.
எல்லா நாம் - நாமெல்லாம்
; தோழீநாம் எனலுமாம்.
"புள்ளூர் ......... ஒன்றுற்று"
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணி ஒன்று உற்று - கருடப் பறவையை
ஊர்கின்ற கடவுளை இக் குரவையுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால் மிகவும் போற்றுவேம்.
அடுக்குப் பன்மை பற்றி நின்றது. பாணி
- பாட்டு. உள்வரி - வேற்றுருக்கொண்டு நடிப்பது ; திருமால் பாண்டியன் முதலியோராக உருக்கொண்டமை
கூறுதலின் உள்வரிப் பாணியாம் என்க. |
1
மணி. 19 : 65--6.
|
|