7. ஆய்ச்சியர் குரவை



1
               உள்வரி வாழ்த்து

கோவா மலையாரம் கோத்த கடலாரம
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால் ; .


1
உரை
1

            "கோவாமலை.........என்பரால்" கோவாமலை ஆரம் கோத்த கடல் ஆரம் தேவர் கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார் பினவே - கோக்கப்படாத பொதியமலையின் ஆரமும் கோக்கப்பட்ட கொற்கைக்கடலின் ஆரமும் இந்திரன் வெகுண்டு இட்ட பூணாகிய ஆரமும், ஆகிய இவை பாண்டியர் தலைவனது மார் பிடத்தன, தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் - அங்ஙனம் தேவர்கோன் பூணாரம் இறுதியாக வுள்ளனவற்றைப் பூண்டவன் யாவனென்னின், செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால் - வள மிக்க துவராபதிக்கண் ஆனிரையை மேய்த்துக் குருந்த மரத்தினை முறித்த கண்ணனென்று கூறுவர்;

       கோவா ஆரம் - சந்தனம் ; கோத்த ஆரம் - முத்து ; இவை இரண்டும் வெளிப்படை.