7. ஆய்ச்சியர் குரவை



1
                முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே ;


1
உரை
1

         முன்னிலைப் பரவல் - முன்னிலையாக்கிப் பராவுதல்.

        "வடவரையை............மருட்கைத்தே" வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கிக் கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே - கண்ணனே நீ முன்பு ஒரு நாள் மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி என்னும் பாம்பினைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலின் நடுவிடத்தைக் கலக்கினாய், கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றாற் கட்டுண்கை- அங்ஙனங் கலக்கிய நின்கை அசோதைப் பிராட்டியின் கடை கயிற்றினால் கட்டுண்ட கை, மலர்க் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தோ - தாமரை மலர் போலும் உந்தியினையுடையாய் இஃது ஒரு மாயமோ; மிகவும் மருட்கையை உடைத்தாயிருந்தது;

        வடவரை - இமயமலை எனினுமாம்; மலையென்னும் ஒப்புமை பற்றி; இங்ஙனம் ஒன்றன் வினையைச் சாதி ஒப்புமை பற்றிப் பிறி தொன்றின்மேல் ஏற்றிக் கூறல் முறை. கடல்வண்ணன் - கடல் போலும் கரியநிறமுடையன் ; கண்ணன் ; அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுண்டல் என்றுமாம்.