7. ஆய்ச்சியர் குரவை

2

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியுங் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே ;


2
உரை
2

          "பெரியவனை ... கண்ணே" பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தியுடை விண்ணவனை - எல்லாத் தேவர்க்கும் பெரியோனை மாயங்களில் வல்லவனை பெரிய உலகங்கள் யாவற்றையும் விரிக்கின்ற நாபிக் கமலத்தை உடைய வானவனை, கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே - கண்களும் திருவடிகளும் கைகளும் அழகிய வாயும் சிவந்து தோன்றுங் கரு நிறமுடையோனைக் காணாத கண்கள் எப் பயனைப் பெற்ற கண்களாம், கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே - காணுங்கால் கண்களை இமைத்துக் காண்பாருடைய கண்கள் என்ன கண்களோ ;

        விரிகமல உந்தி - உலகமெல்லாம் தோன்றும் உந்திக் கமலம் என்றுமாம். செய்ய கரியவன் என்றது விரோதம் என்னும் அணி குறித்து நின்றது. கண்ணிமைத்துக் காண்பார் - இமைத்து ஏனைப் பொருளைக் காண்பவர். எனவே திருமாலை இமையாமற் காணவேண்டு மென்றாயிற்று.