7. ஆய்ச்சியர் குரவை



என்றியாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.


உரை

      "என்றியாம் ...... முரசே" என்று யாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் - என்று கூறி நாம் தொடுத்த குரவைக் கூத்தினுள் போற்றிய கடவுள், நம் ஆத்தலைப்பட்ட துயர் தீர்க்க - நமது பசுவினிடத்துப் பட்ட துன்பங்களை நீக்கிடுக ; வேத்தர் மருள வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே - வெற்றி தரும் இடியைப் படையாகவுடைய இந்திரனது முடி இடத்தை உடைத்த தொடி பொருந்திய தோளையுடைய பாண்டியனது குணிலால் எறியப்படும் முரசமானது பகையரசர் மயங்கும் வண்ணம் நாடோறும் பகைவர்களைக் கொன்று வெற்றியை அத் தென்னற்கு அளித்து முழங்குவதாக.

    வேத்தர் - வேந்தர்; வலித்தல். அடுக்கு, பன்மைப்பொருட்டு.

    [அரும்பத, 'காலைவாய்த் தழுவினாள், மாலைவாய்க் கண்டாள்' என்கையால் குரவை யாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க.]

    இது கொச்சக வொருபோகு உரைவிரவி வந்தது.

     ஆய்ச்சியர் குரவை முற்றிற்று.