உரைபெறு கட்டுரை

2

அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழி லென்றும் மாறாதாயிற்று.


2
உரை
2

அது கேட்டு - அதனைக் கேட்டு, கொங்கு இளங் கோசர் - கொங்கு மண்டிலத்து இளங்கோக்களாகிய கோசர், தங்கள் நாட்டகத்து - தங்களது நாட்டின்கண், நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய - நங்கைக்குச் சாந்தியும் விழவுஞ் செய்தலான், மழை -, தொழில் என்றும் மாறாதாயிற்று - பெய்தற் றொழில் பெய்யும் பருவ நாளெல்லாம் வழுவாதாயிற்று.

அது என்பது செழியன் நன்மை செய்து தீமை நீங்கியதனை. முடிவேந்த ரன்மையின் இளங்கோசர் எனப்பட்டனர். எனவே, கோசரென்பார் சிலர் அந் நாட்டினை ஆட்சி புரிந்தா ரென்பது போதரும்.