உரைபெறு கட்டுரை

3 "அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று."


3
உரை
3

அது கேட்டு - அதனைக் கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலை அகழாகவுடைய இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், நங்கைக்கு நாட் பலி பீடிகை கோட்டம் முந்துறுத்து ஆங்கு - அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, அரந்தை கெடுத்து வரம் தரும் இவள் என - துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித்திங்கள் அகவையின் - ஆடித் திங்களிலே, ஆங்கு ஓர் பாடி விழாக்கோள் - தனது நகரின்கண் விழாச் செய்தலை, பன்முறை எடுப்ப - ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை வீற்றிருந்து - மழை குறை வின்றி நிலைபெறுதலானே, வளம் பல பெருகி - பல வளங்களும் நிறைந்து, பிழையா விளையுள் நாடு ஆயிற்று - பொய்யாத விளை வினையுடைய நாடாயிற்று அவனது நாடு.

ஈண்டு அது கேட்டு என்றது பாண்டியன் செய்து பெற்றதனைக் கேட்டு என்றபடி. மேல் வருவதுமது. முந்து உறுத்து - முற்படச் செய்து. கோவலன் கொலையுண்டதும் கண்ணகியால் மதுரை எரியுண்டதும் ஆடித் திங்களிலாதலின் அத் திங்களிலே விழாச் செய்தன னென்க. அவை ஆடித் திங்களில் நிகழ்ந்தன வென்பது,

1 ''ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே''


என்பதனாற் பெறப்படும். ஆடித் திங்களில் என்றமையின் ஆட்டை விழா வெனக் கொள்க. அகவை - ஏழனுருபு; அகவயின் என் பதன் போலியுமாம். ஆங்கு, ஓர் - அசைகள். பாடி - நகரி.


1 சிலப். 23; 134--7.