உரைபெறு கட்டுரை

1




"அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங் கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுங் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது."


1
உரை
1

அன்று தொட்டுப் பாண்டியன் நாடு - பாண்டியனது நாடா னது அன்று தொடங்கி, மழைவறம் கூர்ந்து வறுமை எய்தி - மழை வறத்தல் மிக்கு அதனால் வறுமையுற்று,வெப்பு நோயும் குருவும் தொடர - வெப்பு நோயும் கொப்புளமும் இடை விடாது நலிதலின், கொற்கையில் இருந்த வெற்றி வேற் செழி யன் - கொற்கைப் பதியில் இருந்த வெற்றி பொருந்திய வேலை யுடைய வழுதியானவன், நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிர வரைக் கொன்று - பத்தினி தேவிக்கு ஆயிரம் பொற்கொல்ல ரைப் பலியிட்டு, கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய - கள வேள்வியாற் சாந்தி செய்து விழவெடுத்தலானே, நாடு மலிய மழை பெய்து - அவன் நாடு மிகவும் மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது - முற்கூறிய நோயும் வறுமைத் துன்பமும் நீங்கிற்று.

அன்று என்றது கதையை உட்கொண்டு நின்றது; காவலன் செங்கோல் வளையக் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்த அன்றுதொட்டு என்றபடி. கூர்தல் - மிகுதல். வெப்பு - தொழுநோய் என்பர் அடியார்க்குநல்லார். குரு - கொப்புளம்; வெம்மையான் உண்டாவது. வெற்றிவேற் செழியன் - பெயருமாம். மாவினால் ஆயிரம் பொற்கல்லர் உருச் செய்து பலியிட்டனன்போலும். இவனே நெடுஞ் செழியனுக்குப் பின் அரசுகட்டி லேறி ஆட்சி யெய்தினான் என்பது பின் 1 நீர்ப்படைக் காதையால் அறியப்படும். சாத்தனாராற் புறத்திலே பாடப் பெற்ற நன்மாறன் என்பான் இவனேபோலும்.

சாந்தி - ஊர்ச்சாந்தி. சாந்தி செய்து விழவெடுத்தலால் என மாறுக. இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன.


1 சிலப். 27: 127--138.