|
45 |
தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ
|
|
தம்முறு பெருங்கணவன் தழல் எரியகம் மூழ்க - தம்மோடுற்ற பெருமை மிக்க கணவன்
சுடுகின்ற தீயிடத்தே மூழ்கவும், கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப்போல் - தாமும்
அத் தீயிடத்தே மூழ்காது பல நீர்த்துறைகளில் படிகின்ற கைம்மை நோன்பு மிக்க வருந்துதலையுடைய
மகளிரைப் போன்று, செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப இம்மையும் இசை
ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ - செம்மையினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவற்றைச்
செய்தலான் இப் பிறவியிலும் புகழை விட்டு நீங்கி வருந்தி ஏக்கமுற்று உள்ளமழிவேனோ;
கைம்மை கூர் மகளிர் என்க. கவலையமகளிர்-உயவற்
பெண்டிர். செம்மை - வளையாமை. இம்மையும் - உம், எச்சவும்மை; என்னை? மறுமையிலும் புண்ணியத்தை
ஒரீஇ எனப் பொருள்படலான். |
|