8. துன்ப மாலை




15

காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ



12
உரை
15

         காதலற் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு அன்றே - என் காதலனை யான் காண்கின்றிலேன் ஆகலான் என்னுள்ளம் கலங்கத் துன்பம் மிகாநின்றது அதுவேயுமன்றி மூச்சும் கொல்லனூதும் துருத்தியும் தோல்வியுற அழல் எழ உயிர்க்கின்றன, ஊது உலை தோற்க உயிர்க்கும் என்னெஞ்சு ஆயின் - இவை இங்ஙனமாதலால், ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ - தோழீ அயலார் கூறிய மொழி யாதோ ;

        கலங்கி - கலங்கவெனத் திரிக்க. நெஞ்சு கலங்கி என்க. விரைவொடு வந்தாள் உரையாடதிருக்கின்ற நிலைமையானும் தன்னெஞ்சு கலங்கலானும் நிகழ்ந்ததொன்றுண்டெனவுட்கொண்டு அந் நிகழ்ச்சி தானும் இவள் நேரே யறியாது நகரத்துப் பிறர் வாய்க்கேட்டு அறிந்திருத்தல் கூடுமெனக் கருதி ஏதிலார் சொன்னதெவன் என்றாள் என்க. இனி, ஏதிலார் என்றது சொன்னவளையும் கேட்கின்றாரையும் எனவுங் கூறுவர். அன்றே,அசை, ஓ, இரக்கம், வாழி, முன்னிலையசை. பின் வருவனவற்றையும் இவ்வாறே கொள்க.