9. ஊர்சூழ் வரி

  என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று


1
உரை
4

       என்றனன் வெய்யோன் - காய்கதிர்ச் செல்வன் நின் கணவன் கள்வனல்லன் என்றனனாக, இலங்கு ஈர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி - அறுக்கப்பெற்று விளங்குகின்ற வளையலை அணிந்த தோள்களையுடைய கண்ணகி மற்றைச் சிலம்பினைக் கையின்கண் ஏந்தி அவ்விடத்து நில்லா ளாய், முறை இல் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று - நீதி யில்லாத அரச னுடைய ஊரின்கணிருந்து வாழ்கின்ற கற்புடைய பத்தினிப் பெண்டீர் இச் சிலம்பு அச் சிலம்பின் மற்றொன்று, அதனைக் காண்மின் ;

       இலங்கு ஈர் என்பதனை ஈர்ந்திலங்கு என மாறுக. நின்றிலள் - அவ்வாயர் பாடியினில்லாது நகரத்துச் சென்றாள். நின்ற சிலம்பு - ஒழிந்த சிலம்பு ; மற்றைச் சிலம்பு. பத்தினிப் பெண்டிர்காள் என் றது இகழ்ச்சி ; என்னை இகழ்ச்சி எனின்? 1அருந்திற லரசர் முறை செயி னல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது." எனவும், 2"மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவ லின்றெனி னின்றால்" எனவும் வருவனவற்றான் இகழ்ந்தாள் என்க. அவன் நாட்டு மகளிர்க்கும் கற்பின்றாம் ஆகலின், அவனிருக்கும் ஊரின்கண் வாழும் நுமக்கும் கற்பு இன்றாம் என இகழ்ந்தாள்.

1 சிலப், 28. 207-8. 2 மணி. 22: 208-9.