9. ஊர்சூழ் வரி

5 பட்டேன் படாத துயரம் படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று


5
உரை
8

       பட்டேன் படாத துயரம் படுகாலை - இம் மாலைக் காலத்து உலகத்து மற்றெவரும் படாத துயரம் பட்டேன், உற் றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று - பிறர் உறாத துன்பத் தினை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யானுறக்கட வேனோ இஃதோர் வினைப்பயன், கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன் எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒருபெயரிட்டு அவனைக் கொன்றார்களே இஃ தோரநியாயம் ;

       படுகாலை - ஞாயிறு மறையும் காலம் ; மாலை, இனி, படுகாலை என்பதற்கு இறப்பு நெருங்கிய காலம் எனவும் உரைப்ப, உறுவன் - அன் விகுதி தன்மைக்கண் வந்தது, பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க. என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டால் என் றது தான் ஓர் அரசனாக இருந்தும் எனது சிலம்பிற்குரிய விலையைத் தருவதற்கு ஒருப்படானாயினனே என்று வியந்து கூறியவாறாம். கொன் றாரே என்ற பன்மை அமைச்சரையும் கருதி நின்றது. உறுவனே - ஏ. வினாவாகி எதிர்மறையை யுணர்த்தி நின்றது. கள்வனோ - ஓ, பிரிநிலை.