9. ஊர்சூழ் வரி

35 வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்


35
உரை
38

       வண்டு ஆர் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய் - காலைப் போழ்தில் தன் கணவனைத் தழுவி அவனிடத்து வண்டுகள் நிறைந்த கரிய அவன் குஞ்சியிற் சூடிய மாலையை வாங்கித் தனது நீண்ட குழலினிடத்துச் சூடிக் கொண்டவள். புண் தாழ் குருதி புறஞ் சோர மாலைவாய்க் கண்டாள். அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் - மாலைப் போழ்தில் அவன் மெய்யிற் புண்ணினின் றும் குதிக்கின்ற குருதி உடலிடமெல்லாம் நனைக்க அக் கோவலன் தன்னைக் காண வொண்ணாத மிக்க துயரத்தினைக் கண்டாள் ;

       வண்டுஆர் - வண்டொலிக்கின்ற எனலுமாம். குஞ்சி - ஆண் பால் முடி. அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் என்றது அவனது இறப்பினை என்க.

       காலைவாய்த் தழீஇக் குஞ்சி மாலை குழன்மேற் கொண்டாள் மாலைவாய்க் குருதி புறஞ்சோரக் காணாக் கடுந்துயரங் கண்டாள் என மாறுக. மாலையில் உண்டாகிய துன்பத்தின் வரம்பின்மையும் விரைவுந் தோன்றக் காலையில் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சியை உடன் கூறினார்.