|
40 |
என்னுறு துயர்கண்டும்
இடருறும் இவள் என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென வுரையாரோ |
|
என்
உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்- என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும்
நம் காதலி யாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி
பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப் பட்ட நுமது
பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை
அறியாதேற்கு - மிக்க துயரத்துக் குக் காரணமாய அரசன் செய்த இக் கொலைத் தொழில்
எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணா எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ
- இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண்
என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ ;
நறுமேனி - மணந்தருவன பூசிய மேனி, ஓகாரம்
- இரக்கம். உறுதுயர் மன் செய்த மறவினை எனக் கூட்டுக. இனி, உறுதுயர் செய்த மன் மறவினை
எனலுமமையும். மறவினை - கொலைத்தொழில், என்னுறு வினை காணா இது என்பதற்கு, இக் கொலை
நிகழ்ச்சி என்னை யுற்ற தீவினையின் பயனேகாண் எனவுரைத்தலும் அமையும் ; ஆ, அசை, தான்
அயல்நாட்டினளாகலான் இந் நாட்டில் எனக்குச் சொல்லார்களோ என்றாள். இஃது அழுகையைச்
சார்ந்த வெகுளி ; மேல்வருவனவும் இன்ன.. |
|