9. ஊர்சூழ் வரி

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்


51
உரை
53

       பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கோல் கோடிய மன்னனையுடைய இக் கூடல் நகரிடத்துக் கற் புடை மகளிரும் உளர்கொல்லோ, கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - தாம் உள்ளத்துக் கொண்ட கணவருடைய மிக்க குறையினைப் பொறுக்கின்ற கற்புடைய மகளிரும் உளர் கொல்லோ ;

       கொண்ட கொழுநர் என்பதற்குத் தம்மை மணந்துகொண்ட எனவும், தம்மை உள்ளத்துக்கொண்ட எனவும் கூறினும் அமையும், உறுகுறை - கணவர் உற்ற நோய் முதலியன ; குற்றங்களைக் குறை யுறப் பொறுத்தலுமாம். உண்டு, பொதுவினை.