9. ஊர்சூழ் வரி





70

மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று

காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்
தீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள


68
உரை
71

       மாயம் கொல் மற்று என் கொல் மருட்டியது ஓர் தெய்வம் கொல் - இங்ஙனம் எழுந்து உரையாடியது வஞ்சங் கொல்லோ அன்றி என்னுள்ளத்தை மயக்கியதோர் தெய்வமோ தான் மற்று வேறு யாதோ, போய் எங்கு நாடுகேன் - இனி யாண்டுச் சென்று என் கணவனைத் தேடுவேன், - பொருள் உரையோ இது வன்று - இக் கூறிய உரை மெய்யுரை யன்று, காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் - என் கண வனைக் கூடுதல் எனக்கு எளிதாயினும் எனது மிக்க வெகுளி தணிந்தாலன்றி அவனைக் கூடேன், தீ வேந்தன் தன்னைக் கண்டு இத் திறம் கேட்பல் யான் என்றாள் - அச் சினந் தணிதற்கு யான் கொடிய பாண்டிய மன்னனைக் கண்டு இக் கொலைத் திறத்திற் குரிய காரணந்தான் யாதென்று கேட்பேன் என்றாள் ;

       தெய்வங்கொல் என்றாள் ; வெட்டுண்டு இரு துணியாகிய உடல் கூடி உயிர் பெற்று நின்றமையான். மாயங்கொல் என்றாள் ; எழுந்து உரையாடி மறைந்தமையான். போயெங்கு நாடுகேன் என்பதற்கு யாண்டும் சென்று என் கணவனைத் தேடுவேன் எனலுமாம். கண வனைக் கைகூடலாவது, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா தின்னுயிரீந்தும், நன்னீர்ப் பொய்கையின் நளி யெரி புக்கும் மறுமைக் கண் கணவனைக் கூடுதல். இத் திறம் என்றது தன் கணவனைக் கொலை செய்த இவ்வகை. யான் நாடுகேன் கைகூடேன் கேட்பல் என்றாள் என்க.