10. வழக்குரை காதை

30





35





40

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி

தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே. என


30
உரை
44

      வாயிலோன் - வாயில்காப்போன், வாழி எம் கொற்கை வேந்தே வாழி - எமது கொற்கை நகரத்து, அரசே வாழ்வாயாக, தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தெற்கின் கட் பொதியின் மலையையுடைய தலைவனே வாழி, செழிய வாழி - செழியனே வாழி, தென்னவ வாழி - பாண்டியனே வாழி, பழி யொடு படராப் பஞ்சவ வாழி - மறநெறிக்கண் செல்லாத பஞ்சவனே நீ வாழ்வாயாக, அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணி - வெட்டுவாயினின்றும் செறிந்தெழுந்து ஒழுகும் குருதி நீங்காத பசிய துண்டமாகிய, பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - பிடரொடு கூடிய மயிடன் தலையாகிய பீடத்தின்கண் ஏறி நின்ற இளங்கொடியாகிய வென்றி தரும் வேலினைப் பெரிய கையின் கண் தாங்கிய கொற்றவையும் அல்லள், அறுவர்க்கு இளைய நங்கை - கன்னியர் எழுவருள் இளையாளாகிய பிடாரியும் , இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நட்ட மாடச் செய்த பத்திரகாளியும், சூர் உடைக் கானகம் உகந்த காளி - அச்சம் விளைக்கும் காட்டினிடத்தைத் தனக்கு இடமாக விரும்பிய காளியும், தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - தாருகனுடைய அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கையும் ஆகிய அவர்களும் அல்லள், செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் - தன் உள்ளத்துக் கறுவுகொண்டாள் போலவும் மிக்க சினமுற்றாள் போலவும், பொன் தொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - தொழிற் றிறம் அமைந்த ஓர் பொற் சிலம்பினை ஏந்திய கையினையுடையளாய், கணவனை யிழந்தாள் கடையகத்தாளே கணவனை யிழந்தாள் கடையகத்தாளே என - தன் கணவனை யிழந்தவள் வாயிலின் முன்னிடத்தாள் என்று கூற ;
      மன்னனை வணங்கும் ஒவ்வொரு முறையுங் கூறலின் வாழ்த்துப் பலவாயின. முதற்கண் வாழி முன்னிலையசையுமாம். படர்தல் என வந்தமையான் பழிநெறி என உரைக்கப்பட்டது. அடங்காத துணி, துணியாகிய தலைப்பீடம் என்க. மடக்கொடியாகிய கொற்றவை. எண்ணும்மையும் அல்லள் என்னும் வினையும் நங்கை முதலியவற்றோடும் கூட்டுக.

      
செற்றம் - கறுவு ; செயிர்ப்பு - வெகுளி ; 1"செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும்" என்றார் பிறரும். கண்ணகி கூறியதனைக் கொண்டு 'கணவனை யிழந்தா'ளெனக் கூறினான் வாயிலோன். கொற்றவை முதலியோர் போல்வளாயினும் அவர்களல்லள் என்றமையின் இஃது உண்மையுவமை என்னும் அணியாகும். கடிய தோற்றம் பற்றிக் கொற்றவை முதலியவாகக் கருதினான்.

1 புறம். 225.