10. வழக்குரை காதை





55





60

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே

51
உரை
63

      எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் - இகழ்தலற்ற சிறப்பினை யுடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறாவொன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும், அன்றியும் - அவனன்றியும், வாயிற் கடைமணி நடு நா நடுங்க-கடைவாயிலினிடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட - பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலிலிட்டுக்கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே - மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த வூர், அவ் வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி - அவ் வூரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை யுடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் னகர்ப் புகுந்து - வீரக் கழலணிந்த மன்னனே பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி முன்னைத் தீவினை செலுத்தலானே நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி - இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம்பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலை யுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என - என் பெயர் கண்ணகி எனப்படும் என்று கூற ;
      புள் - புறா. பருந்தொன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்களித்தான் சிபி. இதனைக் 1"கொடுஞ்சிறைக், கூருகிர்ப் பருந்தி னேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா ஈகை யுரவோன் மருக" என்பதனா னுணர்க. தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன். இதனை, 2"சாலமறைத்தோம்பி............முறைமைக்கு மூப்பிளமையில்" என வருஞ் செய்யுளானறிக. ஆழி - தேர்க்கால். பெரும் பெயர் - மிக்க புகழ். பெருங்குடி என்பது வணிகர் பிரிவு மூன்றனுள் ஒன்று. மகனை - ஐ, இடைச்சொல். சூழ்கழன் மன்னா என்றது கழற்சூழ்வு நின்மாட்டமைந்ததன்றி அறிவுச் சூழ்வு அமைந்திலது என்பதனைப் புலப்படுத்தி நின்றது.

      பெரும்பெயர்ப் புகார் என் பதி என்றது நின் பதியிற்போற் கொடுமை சிறிதும் நிகழாத பதி என்றவாறு. பாண்டியனது முறை வழுவை வலியுறுத்த நின்பதி எனவும், நின்பால் எனவும் கூறினாள்.

1 புறம். 43  2 பழமொழி, 63