10. வழக்குரை காதை



80
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று

இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

78
உரை
81

      தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி - பாண்டியனுடைய மனைவி கோப்பெருத்தேவி உள்ளங் குலைந்து உடல் நடுக்குற்று, கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று - தாய் தந்தை முதலாயினோரை இழந்தவர்க்கு அம் முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும் ; ஆயின் கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனஞ் சொல்லிக் காட்டலாவ தொன்றில்லை என்று கருதி, இணையடி தொழுது

      வீழ்ந்தனளே மடமொழி - அவள் தன் கணவனுடைய இரண்டு அடிகளையும் தொட்டு வணங்கி நிலத்து வீழ்ந்தாள் என்க.

      
கோப்பெருந்தேவி - பெயர். குலைந்தனள் - முற்றெச்சம். வீழ்ந்தனள் - துஞ்சினாள். குலைந்து நடுங்கி இல்லென்று தொழுது வீழ்ந்தனள் என்க. கோப்பெருந்தேவி, மடமொழி தொழுது வீழ்ந்தனள் என மாறுக.

              இது, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா