|
|
வெண்பா
அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண். |
|
அல்லவை
செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே
யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின்
கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வய வேந்தன் தேவி - கொடிய தீங்கினைச்
செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை
உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய்.
|
1"அல்லவை
செய்தார்க் கறங்கூற்றம்" 2"அல்லாத
மாந்தர்க் கறங்கூற்றம்" என்பன ஈண்டு அறியற்பாலன. இது கண்ணகி கூற்றாக அமைந்துள்ளது.
|
1
நான்மணிக். 83. 2
மூதுரை, 27.
|
|