|
15 |
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர |
|
ஆடி
ஏந்தினர் கலன் ஏந்தினர் அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் - ஒளியிட்டு விளங்குகின்ற
அழகிய கலன்களை அணிந்தவர்களாய்க் கண்ணாடியையும் அணிகலன்களையும் ஏந்தினராய், கோடி
ஏந்தினர் பட்டு ஏந்தினர் - புதிய நூலாடை யையும் பட்டாடையையும் தாங்கினராய், கொழுந்திரையலின்
செப்பு ஏந்தினர் - கொழுவிய வெள்ளிலைச் செப்பினை ஏந்தினராய், வண்ணம் ஏந்தினர்
சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வகை நிறங்களையும் பொற்பொடி
முதலிய பொடிகளையும் கத்தூரிக் குழம்பினையும் சுமந்தனராய், கண்ணி ஏந்தினர் பிணையல்
ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - தொடையினையும் மாலையினையும் கவரியினையும்
அகிற்புகையினையும் தாங்கினராய், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து
சூழ்தர - கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் மகளிர் நெருங்கிப் புடைசூழ ;
|
ஆடி
- கண்ணாடி. கோடி - புதிய ஆடை. திரையல் - வெற்றிலை. சுண்ணம் - பொடி. 1"வண்ணமுஞ்
சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்" என்றார் முன்னும். மான்மதத்தின் சாந்து ஏந்தினர் என்பதற்கு
மான்மதங் கலந்த சந்தனத்தை ஏந்தினராய் எனப் பொருள் கோடலுமாம். அணியிழையினராகிய
குறுந்தொழி லிளைஞர் என்றுமாம்.
குறுந்தொழிலிளைஞர் ஏந்தினராய்ச் செறிந்து
சூழ்தர வென மாறுக.
|
1
சிலப். 12 : 36.
|
|