11. வஞ்சினமாலை


5
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் பொன்னிக்



4
உரை
6

நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியுஞ் சான்று ஆக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள் - நல்ல பகற்காலத்து வன்னி மரமும் மடைப்பள்ளியும் தனக்குக் கரி உரைக்கும் பொருளாகப் பலரும் அறிய அவற்றை அவரெதிரில் நிறுத்திக் காட்டிய மொய்த்த கூந்தலையுடையாளும் ;

நற்பகல் - விளக்கமமைந்த பகல். சோணாட்டின் ஓர் பட்டினத்திலிருந்து மதுரைக்கு வழிக்கொண்டு சென்ற வணிகனொருவனும், அவன் மாமன் மகளாகிய கன்னியும் திருப்புறம்பயத்தில் வந்து இரவு தங்கிய பொழுது வணிகன் அரவு தீண்டி இறந்தமையின் அக் கன்னி புலம்பி அழுதலை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப்பிரான் கேட்டு இரங்கித் தமது அருணோக்கத்தால் அவனை உயிர்ப்பித்து, அங்கிருந்த வன்னிமரம் கிணறு சிவலிங்கம் என்னும் மூன்றனையும் சான்றாக வைத்து அவர்கள் மணம் பொருந்தும்படி செய்தனரெனவும், அம் மாது மதுரையிலே மாற்றாளால் இகழப் பட்டபொழுது அவள் வேண்டியபடி அம் மூன்றும் அங்கே தோன்றிச் சான்றாயின எனவும் இரண்டு திருவிளையாடற் புராணத்தும் கூறப்பட்டுளது.

வைப்பூரிலுள்ள தாமன் என்னும் வணிகன் மகளிர் எழுவரில் இளையவளாகிய கன்னியும், அவள் அத்தை மகனும் வழிக்கொண்டு வந்து திருமருகல் என்னும் பதியில் தங்கியகாலை அவன் அரவு கடித் திறந்தமைக்காற்றாது அக் கன்னி புலம்பியழுததனை அப் பதிக்கண் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தப் பெருமான் கேட்டு நிகழ்ந்தவற்றையு ணர்ந்து, "சடையா யெனுமால்" என்னும் பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்து, அவர்கள் மணஞ் செய்துகொள்ளும்படி கட்டளையிட்டனரென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படுகின்றது.சான்று வைத்தது முதலியன இதில் கூறப்படவில்லை ; மற்றும் இரண்டிலும் வேறுபாடுகள் உள்ளன ; திருப்புறம்பய நிகழ்ச்சியிலேயே சான்று வைத்தமை கூறப்படுதலாலும், சான்றாவனவற்றுள் வன்னிமரம் ஒன்றாதலாலும் ஈண்டுக் கூறிய "வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக" என்பதனோடு ஒற்றுமையுறுகின்றது. ஆயின் பெரிய புராணத்தில் திருப்புறம்பய நிகழ்ச்சி கூறப்படாமையானும், சிலப்பதிகாரம் சம்பந்தர் காலத்திற்குச் சில நூற்றாண்டுகளின் முன்பு தோன்றியதாகலானும் சம்பந்தப் பிள்ளையார் திருமருகலில் விடந்தீர்த்த நிகழ்ச்சியை வடமொழியிற் புராணம் வகுத்தோர் திருப்புறம்பயத்தில் அதற்கு முன்னிகழ்ந்ததொரு வரலாற்றுடன் பொருத்திவிட்டனர் போலுமெனக் கருதப்படுகின்றது. வணிகனும் மாதும் ஓரிடத்தில் அடிசிலமைத்துண்டு தங்கியிருந்த பொழுது நிகழ்ந்தமையின் ஆண்டுள்ள கிணறும் சிவலிங்கமும் மடைப்பள்ளி என்பதில் அடங்காநிற்கும் என்க. திருப்புறம்பயத்திலுள்ள சிவபிரான் திருப்பெயர் சாட்சிநாதர் என வழங்குவதும் அறியற்பாலது.