|
25
30
|
பழுமணி அல்குற்பூம் பாவை
விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறிற் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்க முடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய |
|
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே -
மகளிர் அறிவெனப்படுவது அறியாமையை உடைத்து என்று கூறிய சிறந்த நுண்ணிய அறிவினையுடைய
மேலோரது கருத்தினை உணராதே, எண்ணிலேன் வண்டல் அயர்விடத்து - ஆராய்ச்சியில்லாத
யான் இளமையில் வண்டலாட்டினைச் செய்யுமிடத்து என் தோழியை நோக்கி, யான் ஓர் மகள்
பெற்றால், ஒண்டொடி நீ ஓர் மகன் பெறில் - ஒள்ளிய தொடியினையுடையாய் நீ ஓர் மகனைப்
பெற்றால் யான் ஓர் மகளைப் பெற்றால், கொண்ட கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த
மாற்றம் - அம் மகளுக்கு நின்மகன் கணவனாவான் என்று விளையாட்டாக யான் கூறிய மொழியினை,
கெழுமியவள் உரைப்பக
கேட்ட விழுமத்தால் - எனக்குத் தோழியாகப்
பொருந்திய அப் பிள்ளையின் தாய் உண்மையாகக் கொண்டு கூற அதனைக் கேட்ட துன்பத்தானே,
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு - திருவில்லா எனக்கு உள்ளம் இடர்மிகும், என்று எடுத்துத்
தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் - என்று முன்னர் நிகழ்ந்ததனைத் தன் தந்தைக்குத்
தாய் எடுத்துக் கூற அதனைக் கேட்டனளாய், முந்தி ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - முற்பட்டு
ஓர் புதுப் புடைவையை உடுத்து, குழல் கட்டி - கூந்தலை வாரி முடித்து, நீடித் தலையை வணங்கி
- நெடிதாகத் தலையை வணங்கி, தலை சுமந்த ஆடகப் பூம்பாவை அவள் போல்வார் - தன் தாய்
இளமையிற் குறித்த கொழுநனைத் தலைக்கண் சுமந்த பொலிவு பெற்ற பொற்பாவையும், மற்றும்
அவர் போன்றவருமாகிய, நீடிய மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன் - நீண்ட
தேனிறைந்த கூந்தலையுடைய கற்புடை மகளிர் பிறந்த புகார் நகரத்தின்கண் தோன்றினேன்
;
விழுமிய நுண்ணறிவினோர் எனக் கூட்டுக.
"நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பே தைமைத்தே" என வருவ தூஉங்
காண்க. வண்டல் - சிறுமியர் மணலிற் சிற்றிலமைத்தல் முதலிய விளையாட்டு. யான் உரைத்த
மாற்றம் - யான் விளையாட்டாகக் கூறிய உரை. கெழுமியவள் - தோழியாகப் பொருந்தியவள்.
கூரும், முற்று. முந்தி - கொடுப்பாரும் அடுப்பாருமின்றித்,தானே முற்பட்டு எனலுமாம். நீடிய
குழல் என்க. பாவையாகிய அவளும் போல்வாருமாகிய குழலார் என்க. கூறியவாறே அவளுக்கு மகனும்
எனக்கு மகளும் பிறந்த பின் அவளுரைப்ப என விரித்துரைக்க.
ஈண்டுக் கூறிய கற்புடைமகளிர் எழுவர்
வரலாறும் பட்டினத்துப் பிள்ளையார் புராணத்தின் பூம்புகார்ச் சருக்கத்திலுள்ள பின்வருஞ்
செய்யுட்களிற் கூறப்பட்டிருத்தல் காண்க :
கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான்
திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்
வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன் கேள்வனெனும்
கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி
ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள்
பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப்
பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள்
பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
|
|