|
5 |
அரைசர் பெருமான் அடுபோர்ச்
செழியன்
வளைகோ லிழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது |
|
அரைசர்
பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் தலைவனாய வெல்லும் போரினையுடைய நெடுஞ்செழியன்,
வளைகோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இரு நில மடந்தைக்குச் செங்கோல் காட்ட
- தான் தவறுதலானே வளைந்த கோலைத் தன் உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து அப்பொழுதே
பெரிய நிலமங்கைக்குத் தனது செங்கோலை உணர்த்துதற் பொருட்டு, புரைதீர் கற்பின் தேவி
தன்னுடன் அரைசுகட்டிலின் துஞ்சியது அறியாது - குற்றந் தீர்ந்த கற் பினையுடைய தன் பெருந்தேவி
யுடனே அரியணையில் இறந்த தனை உணராதே ;
இழுக்கத்து வளை கோல் என்க. இனிக்
கோல் வளைதலாகிய இழுக்கத்தையுற்ற வளவிலே என்றுமாம். ஆணி - ஆதாரம் ; அச் சாணிபோல்வது
; உரையாணி யென்றுமாம். தான் ஒரு மங்கைக்குச் செய்த பழியினைத் தான் உயிர் விட்டுத்
தீர்த்ததனை ஓர் மங்கையிடத்துக் காட்டினான் என்றார். புரைதீர் கற்பு - பிறர் நெஞ்சு
புகாமை. |
|