12. அழற்படு காதை



120





125
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை

மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்

பைங்கா ழாரம் பரிந்தன பரந்த
தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக்
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்


119
உரை
127

       சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை மைத் தடங்கண்ணார் மைந்தர் தம்முடன் - சாந்து படிந்த நிமிர்ந்த இளமையும் அழகுமுடைய கொங்கையினையும் மை பூசிய பெரிய கண் களையும் உடைய மகளிர் இளையரோடு, செப்பு வாய் அவிழ்ந்ததேம் பொதி நறுவிரை நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித் துறுமலர்ப்பிணையல் சொரிந்த பூந்துகள் - செப்பின்கண் வாய் விரிந்த தேன் மிக்க நன்மணமுடைய அழகிய மலர்கள் விரிந்த மணங் கமழும் கரிய முடியின்கண் செறிந்த மலர் மாலை சிந்திய பூந்தாதும், குங்குமம் எழுதிய கொங்கைமுன்றில் பைங்காழ் ஆரம் பரிந்தன பரந்த தூ மென் சேக்கை - குங்குமம் பூசிய முலை முற்றத்திடத்துப் பசிய முத்து வடமும் செயலற்றுப் பரந்த தூய மெல்லிய படுக்கையிடத்து, துனிப்பதம் பாராக் காமக் கள் ளாட்டு அடங்கினர் மயங்க - துனியின் செவ்வி நோக்கவேண்டாத காமமாகிய கள்ளுண்டு விளையாடும் விளையாட்டினின்றும் அடங்கினராய்க் கலக்கங் கொள்ளவும் ;

       செப்பு - மலரும் அரும்புகள் வைக்கும் பூஞ்செப்பு. இதனை, 1"முதிரா வேனி லெதிரிய வதிரல், பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொ டுடனெறிந் தடைச்சிய, செப்பிடந் தன்ன நாற்றந் தொக்கு" என்பதனானறிக. வாயவிழ்தல் - மலர்தல். வாயவிழ்ந்த மலர்ப்பிணையல் நறுவிரை மலர்ப்பிணையல் எனக் கூட்டுக. நறுமலர் அவிழ்தல் முச்சிக்கு அடை. இனி, செப்புவா யவிழ்ந்த நறுவிரை என்பதற்குச் செப்பின வாய் திறந்து சொரிந்த சாந்து முதலிய வெனலுமாம். காழ் - முத்து வடம். பூந்துகளும் பைங்காழாரமும் பரிந்தன பரந்த சேக்கை என முடிக்க. பரிந்தன - சிந்தினவாய் எனலுமாம். துனிப்பதம் பாராமை - புலவி நீட்டிக்க விட்டிராமை. களிப்பினைச் செய்தலொப்புமையால் காமத்தைக் கள் என்றார். ஈண்டுக் கூறிய இவர் மக்களைப் பெறாதவர்.


1 நற். 337.