12. அழற்படு காதை





135
வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து

சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்


132
உரை
137

       வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி - தம் இல்லத்து வரும் விருந்தின ரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து - விளங்கும் பூணணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங் களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத் தினர் - மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;

       1"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு" ஆகலான் வருவிருந்தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் என்றார். கொடிதன்று - முறையே யென்றபடி. மைத்தடங் கண்ணார் மயங்கக் குழலியர் மகளிரொடு போத மனைக் கிழத்தியர் ஏத்தினர் என்க ; ஏத்தினராக வும் என விரித்து எச்சப்படுத்தலுமாம்.


1 குறள். 81.