|
20
25
30
35
|
நித்திலப் பைம்பூண்
நிலாத்திகழ் அவிரொளித்
[தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்
நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை விளம்பொரி வன்னிகைச் சந்தனம்
கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்பச்
சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன்
தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பின்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன்
விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்]
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் |
|
நித்திலப்
பைம் பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - பசுமையான முத்து வட மணிந்த நிலவுபோல் விளங்கும்
மிக்க ஒளியினையுடைய, முத் தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் - நான்முகன் யாகத்திற்கெனவுரைத்த உறுப்புக்களோடே
முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப்பூதமாகிய கடவுளும்,
ஒளியினையுடைய
ஆதிப்பூதம், வேள்விக் கருவியோடு முறைமையின் வழுவா ஆதிப்பூதம் என்க. கருவி - சமிதை
முதலாயின. முத்தீ வாழ்க்கை - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்னும் மூன்றெரியையும்
பேணும் வாழ்க்கை. "நித்திலப் பைம்பூண்" முதலாகப் 'பூதத்ததிபதிக் கடவுள்' ஈறாகப்
பிராமண பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை.
இக்காதையுள்
[ ] இக்குறியீட்டினுட்பட்ட பகுதிகள் கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப்பட்டன
வாகலின் அவற்றிற்கு உரையெழுதப்படவில்லை. அப் பகுதிகள் சில சுவடிகளிற் காணப்படாமையானும்,
அரசு பூதங் கூறுமிடத்து - "வென்றி வெங்கதிர் புரையு மேனியன்," "குங்கும வருணங் கொண்ட
மார்பினன்" எனவும், வேளாண்பூதங் கூறுமிடத்து - "கருவிளை புரையு மேனியன்," "மண்ணுறு திருமணி
புரையு மேனியன்" எனவும், "காழகஞ் செறிந்த வுடையினன்," "காழகஞ் சேர்ந்த வுடையினன்"
எனவும் இங்ஙனம் கூறியது கூறலாகவும் வேண்டா கூறலாகவும் பல இருத்த லானும், அரும்பதவுரையாசிரியர்
இது முதலாக இஃதீறாக இப்பூதங் கூறிற்றென நான்கு பூதமும் பற்றிக் குறிக்கும் வழி, அரச
பூதத்திற்கு முன்னுள்ள பதினான்கு அடிகளை நீக்கிப் 'பவளச் செஞ் சுடர் முதலாக' எனவும்,
வேளாண் பூதத்திற்கு முன்னுள்ள எட்டு அடிகளை நீக்கி 'மண்ணுறு திருமணி முதலாக' எனவும் குறித்
திருத்தலானும், மற்றும் குறியீட்டுக் குட்பட்ட பகுதிகளில் ஒரு சொற்கேனும் அவரெழுதிய
பொருள் காணப்படாமையானும் அவை இளங்கோவடிகள் இயற்றியன அல்ல வென்பதும், பின்னுள்ள
யாரோ ஒருவரால் இயற்றிப் புகுத்தப்பட்டன ஆகுமென்பதும் நன்கு துணியப்படும். |
|