12. அழற்படு காதை




105
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை யுண்பதோர் திறனுண் டென்ப

தாமுறை யாக அறிந்தன மாதலின்
யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்


103
உரை
108

       கோ முறை பிழைத்த நாளில் இந் நகர் தீமுறை உண்பதோர் திறன் உண்டு என்பது - பாண்டியன் நீதி தவறிய காலத்து இம் மதுரை நகரை எரி முறைமையால் உண்பதாகிய ஓர் செய்கை உண்டு என்பதனை, ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - மேல் வரக்கடவதொரு தன்மையென முன்னரே உணர்ந்தோம் ஆகலான், யாம் முறை போவது இயல்பு அன்றோ என - நாம் இவ் வியல்பானே இவ்விடம் விட்டுப் பெயர்தல் இயற்கையாம் எனக் கூறி, கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நால் பால் பூதமும் பால் பால் பெயர - தன் முலையானே வெற்றி கருதிய கண்ணகியின் எதிரே அந்நான்கு பகுதிப்பட்ட பூதங்களும் வெவ்வேறிடங்களிற் செல்ல ;

       மன்னவன் தவறிழைத்தனையான் எரி மண்டிற்று ; ஆகலின் தீமுறை யுண்பது என்றார். திறன் - செய்கை. ஆமுறையாக - ஆவதொரு தகுதியாக எனலுமாம். கொங்கை குறித்த கொற்றம், மதுரையை எரியூட்டியது.