12. அழற்படு காதை



110
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்

பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
[உரக்குரங்கு உயர்த்த வொண்சிலை யுரவோன்]
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க


109
உரை
112

       கூல மறுகும்கொடித் தேர் வீதியும் - கூலம் விற்குங் கடைவீதியும் கொடி கட்டிய தேர் செல்லும் வீதியும், பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - பகுதி வேற்றுமை, உணரப்பட்ட நான்கு வேறுவகையான தெருக்களும், உரக் குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன் கா எரி ஊட்டிய நாள்போல் கலங்க - வலிய குரங்கினைக் கொடிக்கண் உயர்த்திய வில் வல்லானாகிய அருச்சுனன் காண்டாவனத்தைத் தீயினுக்கு அளித்த நாளிற்போலக் கலக்கம் அடைய ;

       
கூலம் எண்வகைத்து ; அவை -- "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என்பனவாம். இனிப் பதினெண்வகைத் தென்பாரும், பதினாறுவகைத் தென்பாரும் உளர். நால்வேறு தெரு - நால்வகை வருணத்தார் தெரு. எரியூட் டிய நாளில் அவ் வனம் கலக்கமுற்றாற்போல வென்க. அருச்சுனன் காவெரித்ததனைப் பாரதத்துட் காண்க. "உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன்" என்னும் அடி இடைச்செருகல் போலும். அதனை நீக்கின் 'காவெரி யுண்ட' என்னும் பாடம் கொள்ளத்தக்கது. மறுகும் வீதியும் தெருவும் கலங்க வென்க.