13. கட்டுரை காதை





5




10
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந் தகைமையள் பனித்துறைக்
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து


1
உரை
13

       சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவள வாள் முகத்தி - சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையுமுடையாள், கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி - கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி - தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள், இடமருங்கு இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன நிறம் புரையும் மேனியள் - இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள், இடக்கை பொலம் பூந் தாமரை ஏந்தி னும் வலக்கை அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் - இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள், வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் - வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்), கொற்கைக் கொண்கன் - கொற்கைத் நகரத் தலைவனும், குமரித் துறைவன் - குமரியாற்றுத் துறையை யுடையோனும், பொற்கோட்டு வரம்பன் - இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியிற் பொருப்பன் - பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய, குலமுதற் கிழத்தியாதலின் - குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ;

       
சடையும் பிறையும் என்பவற்றில் உம்மை அசைநிலை ; சடையும், சடையிடத்தே பிறையுந் தங்கிய எனலும் அமையும். கடை எயிறு - பன்றிக் கொம்புபோலப் புறப்பட்ட எயிறு என்பர் அரும்பத உரையாசிரியர். முகத்தி என்பது முதலியனவும், கொண்கண் என்பது முதலியனவும் ஒரு பொருண்மேல் வந்த பல பெயர்கள். குலமுதற் கிழத்தி - மதுரையின் அதி தெய்வம் ; அத் தெய்வத்தின் வடிவு வலப்பாகத்து இறைவனையுடைய இறைவியின் வடிவாகக் கூறப் பெற்றது. 'இடக்காற் றனிச்சிலம் பரற்றினும் வலக்காற், புனைகழல் கட்டுந் தகைமையள்' என்பதும் பாடம்..