|
15 |
குலமுதற் கிழத்தி ஆதலின்
அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென |
|
அலமந்து
- மயங்கி, ஒரு முலை குறைத்த திருமா பத்தினி - இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை
மிக்க கற்புடையளாய, அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன் முன்னிலைஈயாள் பின்னிலைத் தோன்றி
- துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின்
எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று, கேட்டிசின் வாழி நங்கை என் குறை என
- நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற ;
பத்தினியாகிய
நங்கை என்க. கற்புடைத் தெய்வமாகலானும் வெகுளியோடிருந்தன ளாகலானும், அவள் முன்னர்த்
தோன்றாது பின்னர்த் தோன்றினாள். நிலையீயாள் - நில்லாள்; வினைத்திரி சொல்.
சின், இடைச்சொல். வாழி யென்றது ஓம்படை கூறியது ; அசையுமாம்... |
|