13. கட்டுரை காதை


80
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்


79
உரை
84

      காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - குடிகளைக் காக்கும் வெண்கொற்றக் குடையினையும் அறநெறியால் உண்டாகி முதிர்ந்த வெற்றியையுமுடைய மேலோன் வாழ்வானாக, கடற் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலின்கண்ணே பகைவர் கடம்பினைத் தடிந்த மன்னவன் வாழ்வானாக, விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலைக்கண் வில்லெழுதிய காவலன் வாழ்வானாக, பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - பொலிவு பெற்ற தண்ணிய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்வானாக, மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலாகிய அரசன் வாழ்வானாக வெனச் சொல்ல ;

விளைந்து முதிர் கொற்றம் - மிகப் பெருகிய வெற்றியுமாம். விறல் - மேம்பாடு. கடற்கடம்பு எறிந்தமையாவது கடல் நடுவண் ஓர் தீவிலிருந்து பகைவரை வென்று அவரது காவல் மரமாகிய கடம்பினைத் துணித்தமை. விடர் - மலை முழைஞ்சு ; மலைக்கு ஆகு பெயர் ; மலை ஈண்டு இமையம். கடம்பெறிந்ததனை 1"இருமுந்நீர்த் துருத்தியுண், முரணியோர்த் தலைச்சென்று, கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேர லாதன்" என்னும் பதிற்றுப் பத்தானறிக. கடம்பெறிந்தமையும் சிலை பொறித்தமையும் 2இந்நூலுள்ளும்பின்னர்க் கூறப்படுதல் அறியத்தகும். பொறையன் - மலைநாட்டையுடையன் ; பொறை - மலை. மாந்தரஞ் சேரல் - 3சிறப்புப் பெயரென்பர் பரிமேலழகர்.


1 பதிற். 20.
2 சிலப் 25: 1--3 ; 28 : 135--6.
3 குறள். 355. உரை.