13. கட்டுரை காதை



100
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிக்
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக

98
உரை
103

      நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி - அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும் பூண்பவற்றையும் பொறாதவர்களாய், வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத் தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப்பான் இவனென்று கூறி, இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக் கண்ணே இவனை இட்டு அடைத்தனராக ;
புனைபவும் பூண்பவும் வெவ்வேறு வகையின. கொத்தொழி லிளையவர் பொறாராகிக் காத்தனரோம்பி இட்டனராக வெனக் கூட்டுக. கோமுறையன்றி வௌவிய பார்ப்பான் என்க. படு பொருள் - களவுப் பொருள் எனலுமாம். 1"உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த், தெறுபொருளும் வேந்தன் பொருள்" ஆகலான் படுபொருள் வௌவுதல் குற்றமாயிற்று.


1 குறள். 756.