13. கட்டுரை காதை

115




120

நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே


115
உரை
122

      நீர்த்து அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப் புகழ்ந்து கூறி, அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட, என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி தவறுற்றது, பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி, தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே, மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும் கொடுத்து, கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத் தனது அழகிய மார்பினை அளித்து, அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந் நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ;
      நீர்த்தன்றிதுவென வென்றது தன் உட்கோளாகக் கொள்க. இனி, இளையவர், வார்த்திகன் ஆகிய இவரிடைக் கூறினானெனக் கோடலு மிழுக்காது. நெடுமொழி - புகழ்மொழி. வயலூர் என்பது பெயர். அவனைப் பணிந்தென்பார் இருநில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி என்றார் ; இது பரியாயவணி. அரசனை நில மடந்தை கேள்வனாகிய திருமாலெனக் கொண்டு திருமார்பு நல்கி என்றார். அவன் பிறரைப் பணியாமையின் அவன் மார்பு எஞ்ஞான்றும் நிலத்திற் பொருந்தியதின் றென்பதனை அவள் தணியா வேட்கை என்பதனாற் பெற வைத்தார்.