13. கட்டுரை காதை





130
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக்
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ

126
உரை
132

      சிறைப்படு கோட்டம் சீமின் - குற்றஞ் செய்தோரையும் பகைஞராய்ப் பற்றப்பட்டோரையும் காவற் படுத்தியிருக்கும் சிறைக்கோட்டத்தினைத் திறந்திடுமின், யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்மின் - எத்துணையாயினும் இறை இறுத்தற்குரிய மக்களது இறையினை விடுதலை செய்யுமின், இடுபொருளாயினும் படுபொருளாயினும் உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என - பிறர் வரவிட்ட பொருளாயினும் புதையற் பொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையுடையனவாம் என்று, யானை, ஏருத்தத்து அணிமுரசு இரீஇக் கோல் முறை அறைந்த கொற்ற வேந்தன் - யானையின் பிடரில் அழகிய முரசினை இருத்தி அரச நீதியாகக் கூறிய வெற்றியினையுடைய மன்னன், தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ - நீதி தவறிய தகுதிப்பாட்டையும் நீ கேட்பாயாக ;

      சிறைப்படு கோட்டஞ் சீமின் என்றது சிறையிலுள்ளாரை வீடு செய்ம்மின் என்றவாறு ; சிறைக் கோட்டத்தை இடித்துத் தூய்மை செய்ம்மின் என்றலுமாம் ; 1"சேராமன்னர் சினமழுங்க, உறையுங்கோட்ட முடன்சீமின்" என்புழி நச்சினார்க்கினியர் இவ்வாறுரைத்தமை காண்க. அறைந்த - அறைவித்த. அறைந்தனன் ; அங்ஙனம் அறைந்த கொற்றவேந்தன் என அறுத்துரைக்க. கறை - கடமை ; வரி, இடுபொருள் - மறைத்து வைத்திட்ட பொருள், புதையல் ; படுபொருள் - மிக்க பொருள் எனலுமாம். உற்றவர்க்குப் பெற்றவர்க்கு உறுதியாமென்க.


1 சீவக. 306.