13. கட்டுரை காதை




ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணியிழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி்


21
உரை
24

       ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய் - அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன், மா பெருங் கூடல் மதுராபதி என்பேன் - மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன், கட்டுரை யாட்டியேன் - நினக்குச் சில சொல்லுதலுடையேன், யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், பைந்தொடி கேட்டி - ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக ;

       
 அணியிழை என்பது ஓர் நங்கை யென்னுந் துணையே குறித்து நின்றது ; மேல்வரும் பெயர்களும் இத் தன்மையன. கட்டுரை - பொருள் பொதிந்த சொல். பைந்தொடி, விளி.

...