13. கட்டுரை காதை



140




145
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்
காம்பெழு கானக் கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ்
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்

138
உரை
146

      கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழந்த கலிங்கநாட்டின்கண், தீம் புனற் பழனச் சிங்கரபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர் நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்தின்கண்ணும், அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர், தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள் பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட நிலத்து எவ்விடத்தும், செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர் வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான் ;

      கலிங்க நன்னாட்டுச் சிங்கபுரத்தினுங் கபிலபுரத்தினும் அரை சாள் செல்வத்து வேந்தர் வசுவுங் குமரனும் எனக்கூட்டுக. வசு சிங்க புரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் ஆண்டான் என்க. தாயம் - உரிமை.