13. கட்டுரை காதை




155
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்


152
உரை
157

      முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் - பசிய தொடியினையுடையாய் முற்பிறவியில் நின் கணவன், வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன் - வெவ்விய வலியமைந்த வசுவென்னு மரசனுக்கு அரச வினை செய்பவன், பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் - கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன், விரதம் நீங்கிய வெறுப்பினன்

      ஆதலின் - கொல்லா விரதத்தினின்றும் விலகிய வெறுக்கப்படுவோனாதலான், ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - இவன் பகை மன்னன் ஒற்றனாவான் எனப் பிடித்துச் சென்று வெற்றி தரும் வேலினையுடைய தன் அரசனிடத்து காட்டிக் கொலை செய்த போது ;

      பைந்தொடி - விளி. வேந்தன் - வசு. செய்வோன், வினைப் பெயர். கோவலன் முற்பிறப்பின் பெயர் பரதன். கோவலனாகிய அவன் என்க. பற்றினன், முற்றெச்சம்.