13. கட்டுரை காதை



160




165
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ
ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்

158
உரை
166

      கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் நீலி என்போள் - கொலைக்களத்துப் பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் நிலையிடத்தைக் காணாளாய்., அரசர் முறையோ பரதர் முறையோ - அரசர்காள் வணிகர்காள் இது நீதியோ, ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - ஊரிலும் சேரியிலும் உள்ளீர் இது நீதியோ, என்று கூறி, மன்றினும் மறுகினும் சென்றனள் பூசல் இட்டு - மன்றத்திலும் வீதியிலும் சென்று யாவருமறிய வெளியிட்டு, எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - பதினான்கு நாள் சென்றபின் கணவனை வணங்கற்குரிய நாள் இதுவென்று கருதி மிகுதியாகப் போற்றி, மலைத்தலை ஏறி -மலை யுச்சியிடத்து ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியிற் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - ஒப்பற்ற பெரிய வானெல்லையில் கொலையிடத்துப்பட்ட தன் கணவனைக் கூடுவதாக நின்றவள் ;

      நீலி நிலைக்களம் காணாள் என்க. காணாள், முற்றெச்சம், சேரி - பல குடிகள் சேர்ந்திருப்பது ; ஊரின் பகுதி, ஏணி - எல்லை ; 1 "நளியிரு முந்நீரேணி யாக" என்பது காண்க. கூடுபு - கூடவெனத் திரிக்க. நின்றோள், வினைப்பெயர்.


1 புறம். 35.