கருத்துறு
கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - என்னுள்ளத்துப்
பொருந்திய கணவனைக் காணாததன் முன்னர் இருத்தலையுஞ் செய்யேன் நிற்றலையுஞ் செய்யேன்
என்று கூறி, கொற்றவை வாயிற் பொன் தொடி தகர்த்து - துர்க்கையின் கோயில் வாயிலில்
பொலிவு பெற்ற தன் சங்கவளையலை உடைத்து, கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு என - நகரத்துக் கீழ்த்திசைக்கண் வாயிலில்
கணவனொடு புக்க யான் மேல்திசையிலுள்ள வாயிலில் தனியேனாய்ச் செல்கின்றேன் என்று
சொல்லி ;
இருத்தல் - அமர்தல், பெயர்தல் - செல்லுதல் ; 1 "பெருமால்
களிற்றுப் பெயர்வோன்" என்பது காண்க. பொன் - பொலிவு. 'கீழ்த்திசை வாயிற் கணவனோடு
புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு' என்றது அவல மிகுதியைப் புலப்படுத்துகின்றது.
|