13. கட்டுரை காதை


185




190
இரவும் பகலு மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு
அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்

184
உரை
190

      இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில் செல்லலுற்று, ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற் பள்ளங்கள் என்று பாராள், மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள், கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப் பிளந்து, ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய, நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று ;

அவல, மிசைய பலவின்பாற் பெயர் ; பள்ளமும் மேடுமாய நெறிகள். என்னாள் என்ற இரண்டும் முற்றெச்சம். வயிறு - நடுவிடம் ; 1 "கடல்வண்ணன் பண்டொருநாட் கடல்வயிறு கலக்கினையே" என்பதூஉம் காண்க. நெடுவேள் குன்ற மென்பதற்கு அரும்பதவுரை யாசிரியர் திருச் செங்கோடு எனவுரைப்பர். அடியார்க்கு நல்லார் இதனை மறுத்து, திருச்செங்குன்று எனவுரைத்தார் ; 2 பதிகத்துக் 'குன்றக் குறவர்' என்பதன் உரை காண்க. அடி வைத்து ஏறி என்றார், அதற்கு முன்பு வருத்தத்தாற் கால் நிலத்துப் பாவாமையால்.


1 சிலப். 17: முன்னிலைப் பரவல்.     2 சிலப்பதி: 3.