பூத்த
வேங்கைப் பொங்கர்க்கீழ் ஓர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி - மலர்ந்த
கொம்புகளையுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று யான் ஒப்பற்ற தீவினையை யுடையேன்
என்று சொல்லி, எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர்,
தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி - தான் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள்
இதுவாகுமென்று அவனை மிகவும் வாழ்த்தி, பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி - பெருமை
மிக்க கண்ணகியின் பெரும் புகழைச் சொல்லி, வாடா மா மலர் மாரி பெய்து - வாடாத
பெரிய பூ மழையைச் சொரிந்து, ஆங்கு அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்த - இந்திரன்
தமராய வானோர் ஆங்கு வந்து துதிக்க, கான் அமர் புரி குழற் கண்ணகி தான் - மணந்
தங்கிய புரிந்த கூந்தலையுடைய கண்ணகி, கோ நகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான
ஊர்தி ஏறினள் - மதுரையார் கொலை செய்த தன் கணவனாகிய கோவலனோடு தேவ விமானத்தில்
ஏறித் துறக்கம் புக்கனள் என்க.
பொங்கர் - மரக்கொம்பு. குன்றத்துக் குறத்தியர்
கேட்கத் தீவினையாட்டியேன் யான் என்றாள். ஏங்கி என்பது ஈண்டுச் சொல்லி என்னும்
பொருட்டு ; சொல்லி ஏக்கமுற்று எனலுமாம். பதினாலாம் நாட் பகற்பொழுது சென்ற பின்
என்பர் அரும்பதவுரையாசிரியர். பெயர் - புகழ் ; பெயரை மந்திரமாகச் சொல்லி என்றுமாம்.
நகர், ஆகுபெயர். அமரர்க் கரசன் தமர் என்றமையால் இந்திரனுக்கு விருந்தாயின ரென்பது
பெற்றாம். கோவலன் தன்னொடு என்றமையால் அவனும் அவருடன் போந்தமை பெறப்படும்.
இக் காதையுள் முன் நீலியின் செய்கை கூறிய விடத்தும் "எழு நாளிரட்டி.........வாழ்த்தி"
என்னும் இரண்டடியும் வந்துள்ளமை காண்க.
அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்திப் பெய்து
ஏத்த எனவும், கண்ணகி தோன்ற வாழ்த்திக் கோவலன்தன்னொடு வானவூர்தி ஏறினள் எனவும்
இயையும். மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி பால் வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துப்
பாண்டியனுடைய செங்கோன்மையை விரித்துரைத்துக் கோவலன் கொலையுண்டமைக் கேதுவாகிய
பழவினையின் உண்மையைத் தெரிவித்து, 'இற்றைக்குப் பதினாலாம் நாள் பகல் சென்றபின்
தேவ வடிவிற் கணவனைக் காண்பாய்' என்று கூறிச் செல்ல, கண்ணகி வையைக்கரையின் வழியே
சென்று திருச்செங்குன்றென்னும் மலையை அடைந்து வேங்கைமரத்தின்கீழே நின்று பதினாலாம்
நாளெல்லை கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க.
|