(முடிகெழு
வேந்தர்........முற்றிற்று.) முடிகெழு வேந்தர் மூவருள்ளும் - முடி பொருந்திய சோழ பாண்டிய
சேரராகிய மூவேந்தருள்ளும், படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - வேற்படை
விளங்கும் பெரிய கையையுடைய பாண்டியர் மரபினோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும்
ஆண்மையும் திறலும், அவர்தம் பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவருடைய பழைய
பெருமையையுடைய மூதூராகிய மதுரையின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவு மலி சிறப்பும்
- அப் பதியின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - தேவர் வருகையும்,
ஒடியா இன்பத்து அவருடைய நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய
அவர் நாட்டின் குடிகளும் உணவின் பெருக்கமும், அவர் தம் வையைப் பேர் யாறு வளம் சுரந்து
ஊட்டலும் - அவருடைய வையையாகிய பெரிய யாறு வளத்தினைச் சுரந்து உண்பித்தலும், பொய்யா
வானம் புதுப்பெயல் பொழிதலும் - காலந் தப்பாத மேகம் புதிய மழையைச் சொரிதலும்,
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் - ஆரபடி
சாத்துவதி யென்னும் இரண்டியல்புகளும் முறையே பொருந்தத் தோன்றும் வரி குரவை என்னுங்
கூத்துக்களும், என்றிவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள்
நிலைமையும் - என்று கூறப்பட்ட இவை அனைத்தும் கூறாதொழிந்த பிற பொருள்களின் அமைப்போடு
பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமை நிலைபெறலும், வட ஆரியர் படை கடந்து - வடக்கிலுள்ள
ஆரிய மன்னர்களின் படையை வென்று, தென் தமிழ்நாடு ஒருங்கு காண - தெற்கிலுள்ள தமிழ்நாடு
முழுதுங்காண, புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு,
குற்றமற்ற கற்பினையுடைய கோப்பெருந் தேவியுடன் அரியணையில் அமர்ந்தவாறே துஞ்சிய
பாண்டியன் நெடுஞ்செழியனோடு, ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று-
ஒருவாறாக நோக்கும்படி அமைந்த மதுரைக் காண்டம் என்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின்
இரண்டாம் பகுதி முற்றியது என்க.
இளங்கோவடிகள் மூவேந்தரையும் ஒரு பெற்றியே புகழ்வது போன்றே மூன்று காண்டத்தின் இறுதிக்
கட்டுரைகளையும் ஒரே முறையில் அமைத்துள்ளார். மூன்றினையும் ஒத்துநோக்கின் ஒரு கட்டுரையிற்
காணப்படும் பொருள் பெரும்பாலனவும் ஏனைக் கட்டுரைகளிலும் இருத்தல் புலனாம். மூவரையும்
சமனுறக்கொண்ட தன் உட்கோள் புலப்படும்பொருட்டே போலும் இக் காண்டத்தின் துன்ப
நிகழ்ச்சிகளைக் கட்டுரையிற் சுட்டாது விடுத்துள்ளார். புகார்க் காண்டத்தின் இறுதிக்
கட்டுரைக்கு பொருளெழுதிய இருவரில் அடியார்க்குநல்லாரேயன்றி அரும்பதவுரையாசிரியர்
தாமும் பின் இரு காண்டங்களின் கட்டுரைகட்குப் பொருள் குறியாதுவிட்டமை
முதலில் காட்டிய முறை பற்றிக்
கற்பார் அறிதல் சாலுமென்னும் கருத்தினாற்போலும்.
அறன் மறன் ஆற்றல் என்பன
மழை பிணித்தாண்டாமை வடிவே லெறிந்தமை ஆரம் பூண்டமை முதலியவற்றிலும், மூதூர்ப் பண்பு
மேம்படுதல் குடி கூழின்பெருக்கம் என்பன ஊர்காண் காதை முதலியவற்றிலும், யாறு வளஞ்
சுரத்தல் புறஞ்சேரியிறுத்த காதையிலும், விண்ணவர் வரவு வஞ்சினமாலை முதலிய மூன்று காதையிலும்,
வரி வேட்டுவவரியிலும், குரவை ஆய்ச்சியர் குரவையிலும் ஒன்றித் தோன்றுவனவாம். ஆரபடி
சாத்துவதி என்பன நாடகத்தின் விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய விருத்தியன் வகை நான்கனுள்
இரண்டாம். ஆரபடி பொருள் பொருளாகவும், சாத்துவதி அறம் பொருளாகவும் வருவனவாகலின்
அவற்றுடன் பொருந்திய ஆடல்கள் முறையே வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையுமாதல் வேண்டும்.
மதுரைக் காண்டம் முற்றிற்று.துள்ளமை காண்க.
ஆல், அசை. கட்டுரை காதை முற்றிற்று.
|