13. கட்டுரை காதை

35




40
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி


35
உரை
41

       நல் நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில் பொருந்திய பார்வையானே, மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு, இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய யானை, கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் - கல்வியாகிய பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும், ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது - நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண் தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது ;

       
மதம் - இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை ; கழி காமமுமாம்; 1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன் உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி. 2"இடங்கழி காமமொடடங்கா னாகி," 3"கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி" என்பன ஈண்டு அறியற்பாலன.


1 புறப். வெண்பா. 12 : 5. 2 மணி. 10 ; 22. 3 மணி. 18 : 165.