|
குருவியோப்பியும்
கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
|
|
குருவி
ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று
வருவேம் முன் - மலைக்கண் சென்று தங்கிக் குருவிகளை ஓட்டியும் கிளிகளைத் துரந்தும் அருவியின்கண்
நீராடியும் சுனையில் மூழ்கியும் இவ்வாறு சுழன்று வரும் எம் முன்னர், மலை வேங்கை நறு நிழலின்
வள்ளி போல்வீர் மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என - குன்றத்து
வேங்கையின் நல்ல நீழற்கண்ணே எம் முள்ளம் நடுங்கும் வண்ணம் ஒரு முலையினை இழந்து வந்து
நின்றீர் வள்ளியினை ஒப்பீர் நீவிர் யாவிர் என்று யாம் வினவ ; (1)
குருவி - தினையைக் கவரும் கிளி அல்லாத
பறவை. குன்றம் - திருச்செங்குன்றென்னும் மலை. குன்றத்துச் சென்று வைகிக் குருவி ஓப்பியுமென்க.
வள்ளி - முருகன் தேவி ; வல்லியுமாம். யாவிரோ என்பதில் ஓ இரக்கமுணர்த்தி நின்றது
; முலை இழந்து துயருடன் நின்றமையான் இரங்கினாரென்க. |
|