|
|
உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி; (6)
|
|
உரை
இனி மாதராய் உண்கண் சிவப்பப் புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின் - மாதே இனியுரைப்பாயாக
நாம் நம் மை உண்ட கண்கள் சிவக்கும் வண்ணம் குற்றம் தீர்ந்த நீரின்கண் மூழ்கி விளையாடினோம்
ஆதலால், உரவு நீர் மா கொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்து ஒன்று பாடுகம் வா
தோழி - கடலின்கண் மா மரத்தினை அழித்த வேலை ஏந்திய முருகனைப் போற்றி மண்டிலமிட்டுக்
குரவைக் கூத்தாடி ஒரு பொருள் பற்றிப் பாடுவோம் தோழீ வருவாய் ;
ஆயின் - ஆதலால் ; 1"ஊதுலை
தோற்க வுயிர்க்குமென் னெஞ்சாயி, னேதிலார் சொன்ன தெவன்" என்றவிடத்து ஆயின் என்னும்
சொல் இப் பொருளில் வருதல் காண்க. மாகொன்ற என்றது மாவாய் நின்ற சூரபதுமனைக் கொன்ற
என்றவாறு. வேலேந்தி - வேலை யேந்தியவன் ; பெயர் ; ஏத்தியென்னும் பாடத்திற்கு வேலை
ஏத்தியேத்தி என அடுக்காக்குக. தொடுத்தல் - வளைத்தல். ஒன்று என்றது மணங் கருதிற்று.
தோழி வா பாடுகம் என்க. |
1.
சிலப். 18. 14-5.
|
|