1. குன்றக் குரவை





சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே;       (7)       



7
உரை
7

       பார் இரும் பௌவத்தின் உள் புக்குப் பண்டு ஒருநாள் சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே - பாரினைச் சூழ்ந்த பெரிய கடலின் நடுவிடத்தே புக்கு முன்னொரு காலத்துச் சூரபதுமனாகிய மாவினை அறுத்த ஒளி பொருந்தும் இலையினையுடைய வெள்ளிய வேல், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே - சிறப்புப் பொருந்திய திருச்செந்திலும் திருச்செங்கோடும் சுவாமிமலையும் ஏரகமும் ஆய இவ்விடங்களின் நீங்காத முருகன் கையிடத்ததாகிய வேலேயாம் ;

       செந்தில் - திருச்செந்தூர் ; திருச்சீரலைவாய். வெண்குன்று - சுவாமிமலை என்பது அரும்பதவுரை. ஏரகம் - 1மலைநாட்டகத்ததொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். பார் - பாறையுமாம் ; 2"பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு" என்பதன் உரை காண்க, முருகன் கடலுட் புக்குச் சூர்மா தடிந்ததனை, 3"பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்" என வருவதனானறிக. சுடரிலைய வெள்வேல் இறைவன் கைவேலன்றே என மாறுக. இலைய ; அ, இடைச் சொல், அன்றே என்பது தேற்றப் பொருட்டாய் நின்றது. வேலே என்பதன்கண் ஏகாரம், அசை.

1 முருகு. 189-(உரை). 2 பரி. 5: 1. 3 முருகு, 45. 6.