1. குன்றக் குரவை





அணிமுகங்க ளோராறு ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே;  (8)



8
உரை
8

       பிணிமுக மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் மணி விசும்பிற் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே - பிணி முகமெனப்படும் மயிலின் மீதேறி அசுரர்களுடைய பெருமை கெடுமாற்றானே அழகிய துறக்கத்துத் தலைவனாகிய இந்திலன் போற்றப் பகைவர்களை அழித்த வெள்ளிய வேல், அணிமுகங்களை ஒராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேல் அன்றே - அழகிய ஆறுமுகங்களையும் பன்னிருகைகளையும் பிறர் தனக்கு ஒப்பில்லையாக உடையானாகிய முருகன் ஏந்திய வேலேயாம் ;

      பிணிமுகம் - மயில் என்பது அரும்பதவுரை ; 1"பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய" என்புழியும் பிணிமுகம் இப் பொருட்டாதல் காண்க. 2புறநானூற்றுரை யாசிரியரும் இவ்வாறு கூறுவர். 3"சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கி" என்புழிப் பரிமேலழகரும், 4"ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" என்புழி நச்சினார்க்கினியரும் பிணிமுகம் முருகக்கடவுள் ஊரும் யானை யென்பர். முருகற்கு யானையும் ஊர்தியாதல் பரிபாடல், பதிற்றுப்பத்து முதலியவற்றான் அறியப்படும்.


1 கல். 7.    2 புறம். 55. 3 பரி. 5 : 2. 4 முருகு. 247.